தனியார் டியுசன் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் கற்பித்தல் அனுமதிப்பத்திரம் கட்டாயமாகிறது: புதிய தேசிய கல்விச் சபை உருவாக்க நடவடிக்கை
முன்மொழியப்பட்டுள்ள தேசிய கல்விச் சபை நிறுவப்பட்ட பின்னர், தனியார் டியூஷன் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் உட்பட நாட்டில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாக கற்பித்தல் அனுமதிப்பத்திரத்தை (Teaching License) பெற வேண்டும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரே, ஒருவர் கல்வி முறைமைக்கு பொருத்தமான ஆசிரியராகக் கருதப்படுவார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, திறமையான ஆசிரியர்களை அமைப்பில் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், கலாநிதி (PhD) பட்டம் பெறும் ஆசிரியர் ஒருவரின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் அடிப்படைச் சம்பளத்திற்கு நிகராகச் சமப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
முறைமைப்படுத்தப்படும் தனியார் பாடசாலைகள் மற்றும் புதிய நியமனங்கள்
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பாக முறையான தரநிலையை ஏற்படுத்தவும், அப்பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் முறைமையொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விச் சபை அமைக்கப்பட்டதன் பின்னர், எதிர்காலத்தில் பட்டதாரிகள் மட்டுமே ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படுவர்.
ஜனாதிபதியினால் தலைவர் நியமனம்
ஆசிரியர், ஆசிரியர் ஆலோசகர், அதிபர், ஆசிரியர் கல்வியியலாளர் மற்றும் கல்வி நிர்வாகம் ஆகிய பொதுக் கல்வியின் அனைத்து தொழில்சார் பிரிவுகளையும் உள்ளடக்கி அமைக்கப்படும் இந்தச் சபையின் தலைவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்.
இதற்குத் தேவையான சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
