இலங்கை கல்விச் சபை (SLEC)
அறிமுகம், நோக்கங்கள் மற்றும்
நடைமுறைப்படுத்தல் குறித்த ஒரு விரிவான பார்வை
ஜெஸார் ஜவ்பர்
சிரேஷ்ட விரிவுரையார்,
தேசிய கல்வி நிறுவகம்
இலங்கையின் இலவசக் கல்வி வரலாற்றில் கலாநிதி
சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த கல்விப் புரட்சிக்குப் பின்னர், கல்வித் துறையின் தரத்தையும் வாண்மைத்துவத்தையும்
அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான மிக முக்கியமானதொரு முன்மொழிவாக "இலங்கை கல்விச் சபை" (Sri Lanka Education Council – SLEC)
உருவாக்கம் அமைகின்றது எனலாம்.
இலங்கையில் பொதுக் கல்வி
முறைமையானது உலகளாவிய இலவசக் கல்வி வாய்ப்பையும் உயர்ந்த எழுத்தறிவு
வீதத்தை உறுதிப்படுத்தியிருப்பினும், கல்விசார் தொழில் வாண்மையாளர்களின்
தகைமைகளை முறைப்படுத்துதல், பதிவுசெய்தல், அனுமதிப்பத்திரம் (Licensing) வழங்குதல்
மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் தர உறுதிப்பாடு ஆகியவற்றில் நீண்டகாலமாக நிறுவன
ரீதியான இடைவெளியொன்று நிலவிவந்தது. இந்த இடைவெளியை நிரப்பி, கல்வித் துறையை சர்வதேச
தரத்திற்கு உயர்த்துவதே முன்மொழியப்பட்டுள்ள இலங்கை கல்விச் சபையின் பிரதான நோக்கமாகும்.
1. அறிமுகமும் பின்னணியும்
1.1 வரலாற்றுப் பின்னணியும் தேவையும்
இலங்கையின் பொதுக் கல்வித்
துறையில் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரியர் கல்வியியலாளர்கள்
மற்றும் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்கள் என பிரதான ஆறு தொழிற்பிரிவுகள் இயங்கி வருகின்றன. எனினும், வைத்தியர்களுக்கு
'இலங்கை மருத்துவ சபை' (SLMC) அல்லது பொறியியலாளர்களுக்கு 'பொறியியல் சபை'
(Engineering Council) காணப்படுவது போன்று, கல்வித் துறைசார் வாண்மையாளர்களைப் பதிவு
செய்வதற்கோ, தொழில்சார் தரநிலைகளை ஒழுங்குபடுத்துவதற்கோ ஓர் உத்தியோகபூர்வமான, சுயாதீனமான
சபை இதுவரை நடைமுறையில் இருக்கவில்லை.
இத்தகையதொரு சபையின் அவசியமானது
பின்வரும் கொள்கை ஆவணங்கள் மூலம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த்துள்ளது.
·
1966
யுனெஸ்கோ/ILO பரிந்துரைகள்: ஆசிரியர்களின் நிலை மற்றும் தொழில்சார் உரிமைகள்
தொடர்பான சர்வதேச வழிகாட்டல்கள்.
·
தேசிய
கல்வி ஆணைக்குழுவின் (NEC) முதலாவது அறிக்கை (1991): அரசியல்
செல்வாக்கற்ற சுயாதீன ஆசிரியர் தொழில்சார் அமைப்பின் அவசியம்.
·
தொழில்சார்
கல்வியியலாளர்கள் சங்கம் (PEASL - 2009): கல்விச் சபை மற்றும் கல்வியியல்
பல்கலைக்கழகம் அமைப்பதற்கான முன்மொழிவுகள்.
·
பாராளுமன்ற
விசேட ஆலோசனைக் குழு அறிக்கை (2010): கல்விச் சேவைகளை வாண்மைத்துவப்படுத்துவதற்கான
அதிகார சபையின் கட்டமைப்பு.
·
தேசிய
கல்விக் கொள்கைச் சட்டகம் (2020–2030): ஆசிரியர் தொழிலின் தரம்
மற்றும் தரநிலைகளை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறை.
1.2 அண்மைய கொள்கை முன்னெடுப்புகள்
புதிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய கல்விச் சீர்திருத்த பிரேரணைகள் ஐந்து தூண்களில்
அமைந்திருந்தன. முதலாவது கலைத்திட்டச் சீர்திருத்தம், இரண்டாவது மனித வள அபிவிருத்தி
என்பனவாகும்.
கல்வித்துறை சார்ந்த மனித வள அபிவிருத்தி தொடர்பான திட்டத்தின் மிக முக்கய
அம்சமாக அரசாங்கம் கல்விச் சபையைக் கருதுகிறது. பிரதமர் மற்றும் கல்வி,
உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் வழிகாட்டலில்,
சிரேஷ்ட பேராசிரியர் ஒ.ஜீ. தயானந்த பண்டா அவர்களின் (தற்போதைய பணிப்பாளர் நாயகம், தேசிய கல்வி
நிறுவகம்) தலைமையில் நியமிக்கப்பட்ட
நிபுணர் குழுவானது விரிவான பங்குதாரர் ஆலோசனைகளை நடத்தி தனது விரிவான பரிந்துரை அறிக்கையைச்
சமர்ப்பித்தது. அது கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக மக்கள் கருத்துக்களுக்காக விடப்பட்டது. கிடைக்கப்பெற்ற கருத்துக்கள் உள்ளடங்கலாக முழுமையான
அறிக்கை தயார் செய்யப்பட்டு ஆகஸ்ட் 7 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கல்வி உயர் கல்வி
மற்றும் தொழில் கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற
வளாகத்தில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள
புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஒரு பிரதான அங்கமாக 'இலங்கை கல்விச் சபைச் சட்டம்'
(Sri Lanka Education Council Act) ஊடாக இச்சபையை பாராளுமன்றச் சட்டமூலத்தின் மூலம்
சுயாதீன அமைப்பாக நிறுவுவதற்கு 2026 ஓகஸ்ட் 18 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2. தரப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகள் (Benchmarking
& Quality Assurance)
தற்போது இலங்கையில் ஆசிரியர்
நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் சேவைப் பிரமாணக் குறிப்புகளின் (Service
Minutes) ஊடாக நிர்வகிக்கப்பட்டாலும், கல்விசார் கற்கைநெறிகளுக்கான தர உறுதிப்பாடும்
சீரான தரநிலைப்படுத்தலும் நிறுவன ரீதியாக ஒருங்கிணைக்கப்படவில்லை. கல்விச் சபையானது
பின்வரும் வழிமுறைகளினூடாகத் தரப்படுத்தலை நடைமுறைப்படுத்தும்:
·
கற்கைநெறிகளின்
தர உறுதிப்பாடு:
பல்கலைக்கழகங்கள் மற்றும்
உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்விமாணி பட்டங்கள், தேசிய கல்வியியல்
கல்லூரிகளினால் (NCOE) வழங்கப்படும் தேசிய போதனாவியல் டிப்ளோமாக்கள் மற்றும் முதுமாணிப்
பட்டங்கள் என்பன இலங்கை தகைமைகள் கட்டமைப்புக்கு (SLQF) அமைவாகக் credits, கற்பித்தல்
பயிற்சி (practicum),
மற்றும் ஆராய்ச்சிக் கூறுகள் அடிப்படையில் தரநிலைப்படுத்தப்படும்.
·
நிறுவன
அங்கீகாரம் (Accreditation)
ஆசிரியர் கல்வியை வழங்கும்
அரச மற்றும் அரச சார்பற்ற சகல நிறுவனங்களும் சபையினால் வகுக்கப்படும் நியமங்களுக்கு அமைய
மதிப்பீடு செய்யப்பட்டு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.
·
தொடர்ச்சியான
வாண்மைத்துவ விருத்தி (CPD)
நவீன கற்பித்தல் முறைகள்,
தொழில்நுட்பப் பயன்பாடுகள் மற்றும் குழந்தை உளவியல் ஆகியவற்றில் ஆசிரியர்கள் தமது திறன்களைப்
புதுப்பித்துக் கொள்வதற்கு credit-based அடிப்படையிலான
CPD செயல்திட்டங்கள் கட்டாயமாக்கப்படும்.
·
ஒழுக்கக்
கோவை மற்றும் நடைமுறைத் தரநிலைகள்
அனைத்துக் கல்விப் பணியாளர்களுக்கான
நடத்தை விதிகள் மற்றும் ஒழுக்க நெறிமுறைக் கோவைகளை (Code of Conduct & Ethics)
சபை உருவாக்கி அமுல்படுத்தும்.
3. ஆசிரியர்களைப் பதிவுசெய்தல்: உலகளாவிய நடைமுறைகள்
(Global Best Practices)
உலகளாவிய ரீதியில் கல்வித்
தரத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் கல்விசார் பணியாளர்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதிப்பத்திரம்
வழங்குவதற்கும் பிரத்தியேக ஒழுங்குபடுத்தல் அமைப்புகளைக் கொண்டுள்ளன:
·
அயர்லாந்து
(The Teaching Council - Ireland)
2001 ஆம் ஆண்டின் சட்டத்தின்படி
நிறுவப்பட்டது. அரச நிதியிலான சம்பளத்தைப் பெறுவதற்கு இச்சபையில் பதிவு செய்தல் கட்டாயமாகும்.
ஆரம்ப ஆசிரியர் கல்விப் பாடநெறிகளை அங்கீகரிப்பதுடன், புதிய ஆசிரியர்களுக்கான தூண்டல்
பயிற்சி (Droichead), தொழில்சார் நடத்தை மற்றும் கற்பிப்பதற்கான தகுதி (Fitness to
Teach) ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.
உலகின் முதலாவது சுயாதீன
ஆசிரியர் சபை (1965). அரச பாடசாலைகளில் கற்பிக்க GTCS பதிவு கட்டாயமானதுடன், ஆசிரியர்கள்
தொடர்ச்சியாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் 'Professional Update' முறையைக் கொண்டுள்ளது.
முன்னர் GTCE ஆக இருந்து,
பின்னர் 2012 இல் கல்வித் திணைக்களத்தின் கீழான ஆசிரியர் ஒழுங்குபடுத்தல் முகவராண்மையாக
(Teaching Regulation Agency) மாற்றப்பட்டு, தகைமை ஆசிரியர் நிலை (QTS) மற்றும் ஒழுக்காற்று
விசாரணைகளை மேற்கொள்கிறது.
தேசிய மட்டத்தில் கற்பித்தல்
மற்றும் தலைமைத்துவ நிறுவனம் (AITSL) தொழில்சார் தரநிலைகளை நிர்ணயிக்க, மாகாண/மாநில
மட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபைகள் (Teacher Regulatory Authorities) ஆசிரியர்களைப்
பதிவு செய்கின்றன.
ஆசிரியர் பதிவுடன் பயிற்சி
அனுமதிப்பத்திரங்களை (Practising Certificates) வழங்கி, ஆசிரியர் கல்வி நெறிகளை அங்கீகரிக்கிறது.
இங்கு தனியான ஒழுங்குபடுத்தல்
சபை இல்லாத போதிலும், அனைத்து ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக அளவிலான ஆராய்ச்சி அடிப்படையிலான
முதுமாணிப் பட்டம் (Master's Degree) கட்டாயமாக்கப்பட்டு மிக உயர்ந்த தரம் மற்றும்
சமூக நம்பிக்கை பேணப்படுகிறது.
4. ஆசிரியர்களைப் பதிவு செய்தல் – முன்மொழிவுகள்
இலங்கை கல்விச் சபை முன்மொழிவுகளின்படி,
'ஆசிரியர்' என்ற குறுகிய சொல்லுக்குப் பதிலாக விரிவான பொருளுடைய "கல்வியியலாளர்"
(Educator) என்ற பொதுப் பதத்தின் கீழ் சகல பணியாளர்களும் வகைப்படுத்தப்படுவர்.
1. உதவிக் கல்வியியலாளர் (Assistant Educator) - அங்கீகரிக்கப்பட்ட போதனாவியல் டிப்ளோமா அல்லது கல்வி கூறுகளைக் கொண்ட 3 வருட இளமானிப் பட்டம்.
2. துணைக் கல்வியியலாளர் (Associate Educator) -4 வருட B.Ed. பட்டம் அல்லது இளமானிப் பட்டத்துடன் கூடிய 1 வருட கற்பித்தல் பயிற்சி / CPD உள்ளகப் பயிற்சி.
3. கல்வியியலாளர் - திறமையான நிலை (Educator - Proficient) - துணைக் கல்வியியலாளர் நிலைக்குப் பின்னர் குறைந்தபட்சம் 3 வருட சேவை அனுபவம் + அங்கீகரிக்கப்பட்ட CPD பூர்த்தி செய்தல்.
4. பட்டயக் கல்வியியலாளர் - திறமை வாய்ந்த நிலை (Chartered Educator) - திறமையான நிலைக்குப் பின்னர் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் + ஆராய்ச்சிக் கூறுகளைக் கொண்ட 2 வருட முதுமாணிப் பட்டம் (Master's Degree - 12 Credits).
5. பட்டய ஆலோசனைக் கல்வியியலாளர் (Chartered Lead Advisor) - பட்டயக் கல்வியியலாளர் நிலைக்குப் பின்னர் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் + அங்கீகரிக்கப்பட்ட கட்டாய CPD பூர்த்தி செய்தல்.
6. சிரேஷ்ட பட்டய ஆலோசனைக் கல்வியியலாளர் (Senior Chartered Consultant Educator) - ஆலோசகர் நிலைக்குப் பின்னர் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் + விசேட புத்தாக்க வாண்மைத்துவ செயல்திட்டங்கள்.
4.2 பதிவு மற்றும் அனுமதிப்பத்திரக் கொள்கைகள்
·
முழுப்
பதிவு மற்றும் தற்காலிகப் பதிவு
நிர்ணயிக்கப்பட்ட தகைமைகளைப்
பூர்த்தி செய்வோருக்கு முழுப் பதிவும் நிரந்தர அனுமதிப்பத்திரமும் வழங்கப்படும். தகைமைகளை
முழுமையாகப் பூர்த்தி செய்யாத தற்போதைய ஆசிரியர்களுக்குத் தகைமைகளை நிறைவு செய்வதற்காக
தற்காலிகப் பதிவும் இணை அங்கத்துவமும் வழங்கப்படும்.
·
அனைத்துப்
பிரிவுகளையும் உள்ளடக்குதல்
அரச பாடசாலைகள், தேசிய/மாகாண
பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் மத்ரஸாக்கள்
ஆகிய அனைத்திலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.
5. இலங்கை கல்விச் சபையின் அதிகார எல்லைகள் (Scope
& Mandate)
இலங்கை கல்விச் சபையானது
முன்பள்ளிக் கல்வி முதல் சிரேஷ்ட இடைநிலைக் கல்வி வரையான பொதுக் கல்விப் பரப்பில் கடமையாற்றும்
பின்வரும் 6 பிரதான சேவைப் பிரிவுகளையும் தனது அதிகார எல்லைக்குள் உள்ளடக்கும்:
·
1.
இலங்கை ஆசிரியர் சேவை (SLTS)
·
2.
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை (SLTAS / ISAs)
·
3.
இலங்கை அதிபர் சேவை (SLPS)
·
4.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES)
·
5.
இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS)
·
6.
இலங்கை தொழில்நுட்பக் கல்விச் சேவை (SLTES)
5.1 சபையின் ஆளுகைக் கட்டமைப்பு (15 உறுப்பினர்கள்)
·
07
நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்
ஜனாதிபதியால் கல்வி அமைச்சரின்
பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படும் தலைவர், உப தலைவர், கல்வியியலாளர்கள், சிங்கள-ஆங்கில
மற்றும் தமிழ்-ஆங்கில இருமொழி நிபுணர்கள், சிறுவர் உளவியலாளர் மற்றும் சட்ட நிபுணர்.
·
06
தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள்
பதிவுசெய்யப்பட்ட ஆசிரியர்,
அதிபர், ஆலோசகர், கல்வியியலாளர், தொழில்நுட்ப ஆசிரியர் மற்றும் கல்வி நிர்வாகி ஆகிய
6 சேவைப் பிரிவுகளின் உறுப்பினர்களால் மக்களாட்சி முறையில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள்.
·
02
பதவியின் நிமித்தமான உறுப்பினர்கள்
கல்வி அமைச்சின் செயலாளர்
மற்றும் நிதி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதிகள் (உதவிச் செயலாளருக்கு குறையாத மட்டம்).
6. தற்போதைய முறையிலிருந்து கல்விச் சபைக்கு மாறுதல்
(Transition Strategy)
திடீர் மாற்றங்களால் ஏற்படும்
நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் எதிர்ப்புகளைத் தவிர்ப்பதற்காக 5 வருட கால படிப்படியான
நிலைமாற்ற அணுகுமுறை (Phased Transition Approach) முன்மொழியப்பட்டுள்ளது:
·
சேவை
உரிமைகள் பாதுகாப்பு
புதிய முறைமைக்கு மாறுவதால்
தற்போது சேவையில் உள்ள எந்தவொரு உத்தியோகத்தரின் பதவியோ, சம்பள அளவீடோ அல்லது தரமோ
பாதிக்கப்படாது.
·
டிப்ளோமாதாரிகளுக்கான
உயர்கல்விப் பாலம்
தற்போதைய ஆசிரியர் டிப்ளோமாதாரர்கள்
பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்வதற்கு 1 வருட இணைப்புப் பாடநெறிகள் (Top-up degree
programmes) அறிமுகப்படுத்தப்படும்.
·
நிறுவனங்களுக்கிடையிலான
தெளிவான அதிகாரப் பகிர்வு
அரசாங்க சேவை ஆணைக்குழு
(PSC / ECS) ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்று நிர்வாகத்தைத் தொடர்ந்தும் மேற்கொள்ளும்;
தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) கொள்கைகளையும், தேசிய கல்வி நிறுவகம் (NIE) கலைத்திட்டத்தையும்
வகுக்கும்; இலங்கை கல்விச் சபை (SLEC) தொழில்சார் தரநிலைகள், பாடநெறி அங்கீகாரம், பதிவு
மற்றும் அனுமதிப்பத்திர ஒழுங்குபடுத்தலை பிரத்தியேகமாக மேற்கொள்ளும்.
7. சபையின் தொழிற்பாடுகள் (Functions of the Council)
·
அனுமதிப்பத்திரம்
வழங்கல் - கல்விசார் தொழில் வாண்மையாளர்களுக்கு உத்தியோகபூர்வ
அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், புதுப்பித்தல், இடைநிறுத்துதல் அல்லது இரத்து செய்தல்.
·
தர
உறுதிப்பாடும் அங்கீகாரமும் - ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், தேசிய கல்வியியல்
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் கல்விப் பாடநெறிகளைத் தணிக்கை செய்து
அங்கீகரித்தல்.
·
தேசிய
பணியாளர் பதிவேடு - அனைத்துக் கல்விசார் பணியாளர்களினதும்
விபரங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை டிஜிட்டல் தரவுத்தளத்தைப் (National Educator
Registry) பராமரித்தல்.
·
சம்பள
மற்றும் சேவை ஆலோசனைகள் - கல்விச் சேவைகளுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கும்,
ஏனைய துறைகளுடன் ஒப்பிடக்கூடிய கவர்ச்சிகரமான சம்பளக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும்
அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்குதல்.
·
பிணக்குத்
தீர்வு - சேவைப்
பிரிவுகளுக்கிடையேயான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைக் கட்டமைப்பாக இயங்குதல்.
·
ஆராய்ச்சிப்
பிரிவு - ஆசிரியர்
தரம், கற்பித்தல் முறைகள் மற்றும் வாண்மைத்துவ வளர்ச்சி குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான
பிரத்தியேக ஆராய்ச்சிப் பிரிவை நடாத்துதல்.
8. தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல் (Implementation
Mechanisms)
·
1.
சட்ட வரைவாக்கம்-
அமைச்சரவை அங்கீகாரத்தைத்
தொடர்ந்து சட்ட வரைஞர் திணைக்களத்தின் ஊடாக 'இலங்கை கல்விச் சபைச் சட்டமூலத்தை' நிறைவுசெய்து
பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதல்.
சபைக்குப் பொருத்தமான
கட்டட வசதிகளைப் பெறுவதுடன், இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) மேலதிக செயலாளர் தரத்திலான
முழுநேரப் பணிப்பாளரையும் அரச பணியாளர்களையும் நியமித்தல்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின்
ஒத்துழைப்புடன் அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள், புதுப்பித்தல் மற்றும் CPD கண்காணிப்புக்கான
நவீன இணைய முறைமைகளை நிறுவுதல்.
அனுமதிப்பத்திரம் மறுக்கப்படுதல்
அல்லது ஒழுக்காற்றுத் தீர்மானங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கான சுயாதீன மேன்முறையீட்டுப்
பொறிமுறையை அமைத்தல்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளை
இணைத்து 4 வருட பட்டப்படிப்பை வழங்கும் "இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகத்தை"
(Sri Lanka University of Education) ஸ்தாபிக்கும் நீண்டகாலத் திட்டத்தை முன்னெடுத்தல்.
முடிவுரை
இலங்கை கல்விச் சபையின்
(SLEC) ஸ்தாபிப்பானது, ஆசிரியர்களையும் கல்விப் பணியாளர்களையும் வெறும் அரச ஊழியர்களாக
அன்றி, கௌரவமிக்க வாண்மையாளர்களாக உருமாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற உலகளாவிய அனுபவங்களிலிருந்து சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொண்டு,
சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இச்சபை இயங்குவதை உறுதிசெய்வதன் மூலமே இலங்கையின்
எதிர்கால சந்ததியினருக்கு உலகத்தரம் வாய்ந்த பண்புசார் கல்வியை உத்தரவாதம் செய்ய முடியும்.
(இலங்கை கல்விச் சபையை நிறுவதற்கான ஆலோசனை
மற்றும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து
அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு வெளியிட்ட ஆவணத்தின் அடிப்படையில்
எழுதப்பட்டுள்ளது.)
