உயர்தரப் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு மாணவர்கள் சமூகமளிக்காததால் 9 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி விரயம்
க.பொ.த. உயர்தரப் பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சைக்கு விண்ணப்பித்த போதிலும், குறிப்பிடத்தக்களவிலான மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றாமையினால் 9 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 முதல் 2024 வரையான ஆறு வருட காலப்பகுதியில் மூன்று தடவைகள் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 36 சதவீதமானோர் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதோடு, விண்ணப்பித்த மாணவர்களில் 42 சதவீதமானோர் பரீட்சைக்குச் சமூகமளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இப்பரீட்சையை நடத்துவதற்காக 507 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் எட்டப்படவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மதிப்பீட்டுச் செலவுகள் தவிர்த்து, பரீட்சை நடத்தப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் ஏற்பட்ட செலவு 21.65 மில்லியன் ரூபாவாக உள்ள நிலையில், பரீட்சைக்கு விண்ணப்பித்துத் தோற்றாத 377,816 மாணவர்களுக்காக 9.1 கோடி ரூபா நிதி பயனற்ற வகையில் செலவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
