அரச சேவை ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகளின் போது சிறுவர் குற்றங்களில் ஈடுபடாதவர் சான்றிதழை கட்டாயமாக்க நடவடிக்கை

 

அரச சேவை ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகளின் போது சிறுவர் குற்றங்களில் ஈடுபடாதவர் சான்றிதழை கட்டாயமாக்க நடவடிக்கை

​அரச சேவையில் இணையும், குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் நபர்கள் சிறுவர் குற்றங்களில் ஈடுபடாதவர்கள் அல்லது அத்தகைய குற்றச்சாட்டுகள் அற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

​அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

​பொலிஸார் அல்லது உரிய உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் இச்சான்றிதழ் பெறப்பட வேண்டும். அத்துடன், தற்போது அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்களும் தங்களது பதவியுயர்வு மற்றும் வருடாந்த வேதன உயர்வுகளைப் பெற்றுக்கொள்ளும்போது, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தாம் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இச்சான்றிதழைப் புதுப்பித்துச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

​இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

​"அரச சேவையில் இணையும், குறிப்பாக சிறுவர்களுடன் நேரடித் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது, அந்த நபர்கள் சிறுவர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக, சிறுவர்களுடன் பணிபுரிபவர்கள் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாதவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்தச் சான்றிதழ் நடைமுறையை நாம் ஆரம்பித்துள்ளோம்.

​அதேபோல், தற்போது அரச சேவையில் இருப்பவர்களும் தங்களது வினைத்திறன்காண் தடைகள் மற்றும் வேதன உயர்வுகளின் போது, குறிப்பிட்ட காலப்பகுதியில் தாம் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இச்சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு இத்தகைய நடைமுறைகள் அவசியமானவை" எனக் குறிப்பிட்டார்

Post a Comment

Previous Post Next Post