புதிய கல்வி மறுசீரமைப்பு முன்மொழிவு 2026: திருத்தப்பட்ட விடயங்கள் எவை?

 


புதிய கல்வி மறுசீரமைப்பு முன்மொழிவு 2026: திருத்தப்பட்ட விடயங்கள் எவை?


அறிமுகம்

இலங்கையின் பொதுக்கல்வித் துறையை 21 ஆம் நூற்றாண்டின் பூகோள சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலும், நிலையான தேசிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார மீளெழுச்சிக்கு பங்களிக்கும் வகையிலும் உருமாற்றுவதற்காக கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) மற்றும் தேசிய கல்வி நிறுவகம் (NIE) என்பன ஒன்றிணைந்து பாரிய கல்வி மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இம்மாற்றத்தின் ஆரம்பக் கொள்கை வரைவு மற்றும் நீண்டகால இலக்குகள் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நடைமுறைச் சாத்தியக்கூறுகள், துறைசார்ந்தோரின் கருத்துக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிகளின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற கருத்துக்கள் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னைய முன்மொழிவுகள் திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட ஆவணம் ஒன்று பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்விக்காக தேசிய கல்வி நிறுவகம் வௌியிட்டுள்ளது. இவற்றுக்கிடையிலான கொள்கை ஒருமைப்பாடுகள், தத்துவார்த்த மாற்றங்கள் மற்றும் நடைமுறைத் திட்ட வேறுபாடுகள் பற்றி விரிவாக நோக்கலாம்.

(ஆவணங்களை மையப்படுத்தி மாத்திரம் இங்கு நோக்கப்படுகிறது. அத்தோடு இதில் குறிப்பிடப்படும் எந்தக் கருத்துக்களும் நிறுவனம் சார்ந்ததல்ல)

1. கல்வித் தத்துவார்த்த மாற்றம்: உள்ளடக்க முன்னுரிமை முறையிலிருந்து கற்றல் பேறு முன்னுரிமை முறைக்கு

கிட்டத்தட்ட தத்துவார்த்த அணுகுமுறையில் பெரியளவிலான மாற்றங்கள் இல்லை. மாணவர் மையக் கல்வி, மெய்யுறுதிக் கற்றல், மற்றும் நடைமுறையிலுள்ள உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் கல்வி (Content-Based Education - CBE) முறையிலிருந்து விடுபட்டு, கற்றல் பேறுகள் அடிப்படையிலான கல்வி முறைக்கு (Outcome-Based Education - OBE) மாறுவதை கல்வி மறுசீரமைப்பு தத்துவார்த்த பின்னணியாகக் கொண்டுள்ளது. 

2007 ஆம் ஆண்டுகளில் ஆரம்பமான கல்விச் சீர்திருத்ததில் தேர்ச்சி மையக் கலைத்திட்டம் மற்றும் கற்றல் பேறு சார்ந்த கலைத்திட்டத்திற்கு மாற்றம் இடம்பெற்றாலும், நடைமுறையில் நாம் இன்னமும் உள்ளடக்கம் சார் கல்வி முறையின் பிரயோகத்தையே பின்பற்றுகிறோம். கலைத்திட்டம் கற்றல் பேறுகள் சார்ந்து இருப்பினும் கற்பித்தல் மற்றும் மதிப்பீடுகள் உள்ளடக்கம் முன்னுரிமையளிக்கப்பட்டதாகவே தொடர்கின்றன. 

இப்போது கற்றல் பேறுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறைக்கான ஏனைய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் மீள ஒழுங்குபடுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுள்ளன. 

பாடப்புத்தகத்திலிருந்து மொடியூலுக்கு (Module)

முழு ஆண்டுக்குமான தடிப்பமான பாடப்புத்தகங்களை மனனம் செய்யும் முறைக்குப் பதிலாக, குறிப்பிட்ட கற்றல் பேறுகளை அடைவதை இலக்காகக் கொண்ட சிறிய, சுயாதீனக் கற்றல் அலகுகளாகிய "மொடியூல்கள்" மற்றும் "செயற்பாட்டு நூல்கள்" (Activity Books) அறிமுகப்படுத்தப்படுகின்றன.


வகுப்பறைப் பாத்திர மாற்றம்

ஆசிரியர் வெறும் விரிவுரை செய்பவராக (Lecturer) இருக்காமல், கற்றலை எளிதாக்கும் வழிகாட்டியாகவும் (Facilitator) வளவாளராகவும் செயற்படுவார். மாணவர்கள் வெறுமனே செவிமடுத்துக் குறிப்பெடுப்பவர்களாக இல்லாமல் வினவுதல், ஆராய்தல், செய்துகாட்டல் மற்றும் கூட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


முழுமையான ஆளுமை உருவாக்கம்

13 வருட பொதுக்கல்வியின் முடிவில் அறிவு (Knowledge), திறன்கள் (Skills), விழுமியங்கள் (Values), மனப்பாங்குகள் (Attitudes) மற்றும் தேர்ச்சிகள் (Competencies) கொண்ட சமநிலையான பிரஜை ஒருவரை உருவாக்குவதே கல்வித் திட்டத்தின் பிரதான இலக்காகும்.

2. காலம் மற்றும் அமுலாக்கத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

2025 வரைபிற்கும் 2026 வழிகாட்டல் ஆவணத்திற்கும் இடையிலான பிரதான வேறுபாடு அமுலாக்கல் கால அட்டவணையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமாகும்.

ஆரம்ப வகுப்புக்களின் அமுலாக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

முன்னர், 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு புதிய பாடத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. 

தரம் 1க்கு 2026 ஆம் ஆண்டு புதிய கலைத்திட்டம் அமுலாகிகக் கொண்டிருக்கிறது. தரம் 6 க்கான புதிய கலைத்திட்ட அமுலாக்கம் பல்வேறு காரணங்களை முன்வைத்து நிறுத்தப்பட்டது. 

புதிய ஆணவனத்தின் படி, 2027 இல் தரம் 2 மற்றும் 6 இற்கு திட்டவட்டமாக அமுல்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2028 இல் தரம் 3, மற்றும் தரம் 7 ஆகியவற்றுக்கு புதிய திட்டம் அறிமுகமாகும். 

அவ்வாறே க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2029 இல் மாற்றமடையும் என திட்டமிடப்பட்டிருந்தது. புதிய ஆவணத்தில் அது தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. 

க.பொ.த உயர் தரம் 2031 இல் புதிய திருத்தப்பட்ட முறையில் நடைபெறும் என கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்படிருந்தது. இப்போது அதற்கான விரிவான ஏற்பாடுகளின் பின்னர் அது தொடர்பான அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


3. மதிப்பீட்டு முறைமை மற்றும் புள்ளியிடலில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள்

மாணவர்களின் கல்வி அடைவுகளை மதிப்பிடும் கட்டமைப்பானது 2026 ஆவணத்தில் கணிசமான சமநிலையைப் பெற்றுள்ளது.

  • தொடர் மதிப்பீடு (Formative) vs தொகுப்பறி மதிப்பீடு (Summative)

2025 இல் ஒரு மொடியூலின் இறுதி அடைவில் 70% தொடர் மதிப்பீட்டிற்கும், 30% தொகுப்பறி மதிப்பீட்டிற்கும் ஒதுக்கப்பட்டு 'GPA' முறையில் தரப்படுத்தப்படும் என முன்மொழியப்பட்டது. ஆனால், இப்போது கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் இது 50% தொடர் மதிப்பீடு (Formative) + 50% தொகுப்பறி மதிப்பீடு (Summertive) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • கிரெடிட்களும் மதிப்பீடுகளின் எண்ணிக்கையும்: 2026 வழிகாட்டலின்படி, ஒரு பாடத்திற்குரிய தொடர் மதிப்பீடுகளின் எண்ணிக்கை அப்பாடத்தின் கிரெடிட் மதிப்பிற்குச் சமமாக இருக்கும் (உதாரணமாக: 2 கிரெடிட் கொண்ட பாடத்திற்குச் சரியாக 2 தொடர் மதிப்பீடுகள்).

  • தரப்படுத்தல் வரம்புகள் (Grading System):

  • 85 – 100 (A): மிக உயர்வு (Excellent)

  • 70 – 84 (B): உயர் அடைவு (High)

  • 55 – 69 (C): திருப்திகரமானது (Satisfactory)

  • 40 – 54 (S): அடிப்படை அடைவு (Basic)

  • 40 இற்குக் கீழ் (W): முன்னேற்றம் தேவை (Needs Improvement)

4. ஆரம்பப் பிரிவில் நேர மாற்றம்

  • தரம் 1 மற்றும் 2 க்கு 11.45 வரையும், தரம் 3 மற்றும் 4 இற்கு 1 மணி வரையும் தரம் 5 க்கு 1.30 வரையும் என நேரம் மீள ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 

  • பாடங்கள் மற்றும் ஏனைய விடயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை. 


5. கனிஷ்ட இடைநிலைப் பிரிவு (தரம் 6–9) பாடப்பரம்பல் மற்றும் கிரெடிட் கட்டமைப்பு

மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் முகமாகப் பாடங்கள் மீளமைக்கப்பட்டுள்ளன.

  • பாடங்களின் ஒருங்கிணைப்பு: 2025 இல் வரலாறு, புவியியல், குடியியற்கல்வி என்பன தனித்தனிப் பாடங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன (மொத்தம் 14 அத்தியாவசியப் பாடங்கள்). ஆனால், 2026 இல் அவை ஒருங்கிணைக்கப்பட்டு "சமூகக் கல்வி" (Social Studies - 3 Credits / வாரத்திற்கு 4 பாடவேளைகள்) எனும் ஒற்றைப் பாடமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்குள் பிரிவுகளாக குறிப்பிட்ட பாடங்கள் இருக்கும்)


அத்தியாவசியப் பாடங்கள் மற்றும் அவற்றின் கிரெடிட்கள் (மொத்தம் 29 கிரெடிட்கள்):

  • தலா 3 கிரெடிட்கள் கொண்ட பாடங்கள்: தாய்மொழியும் இலக்கியமும் (சிங்களம்/தமிழ்), ஆங்கில மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் சமூகக் கல்வி ஆகிய ஐந்து பாடங்களுக்கும் தலா 3 கிரெடிட்கள் வீதம் வழங்கப்படுகின்றன. இதில் சமூகக் கல்வியானது வரலாறு, புவியியல் மற்றும் குடியியற்கல்வி ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாகும்.

  • தலா 2 கிரெடிட்கள் கொண்ட பாடங்கள்: சுகாதாரமும் உடற்கல்வியும், சமயம், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் (ICT), வாழ்க்கைக்கான தொழினுட்பவியல், அழகியல் கல்வி மற்றும் விளையாட்டுகள்/சங்கங்கள்/சமூக சேவை/தொழில் வாழ்வுக்குத் தயார்ப்படுத்தலும் வாழ்க்கைத்திறன்களும் (இது தரம் 7 முதல் நடைமுறைப்படுத்தப்படும்) ஆகிய பாடங்களுக்குத் தலா 2 கிரெடிட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


  • தலா 1 கிரெடிட் கொண்ட பாடங்கள்: இரண்டாம் தேசிய மொழி (சிங்களம்/தமிழ்) மற்றும் தொழில்முயற்சியாண்மையும் நிதிசார் எழுத்தறிவும் ஆகிய பாடங்களுக்குத் தலா 1 கிரெடிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தெரிவு மொடியூல்கள் (1 கிரெடிட்):

மாணவர்கள் தங்களின் ஆர்வம் மற்றும் பாடசாலையின் வளங்களுக்கு ஏற்ப பின்வரும் துறைகளில் இருந்து ஒரு தவணைக்கு 1 கிரெடிட் மதிப்புடைய ஒரு மொடியூலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்:

  • கல்விசார் பாடங்களின் விரிவாக்கங்கள்: கணிதம், விஞ்ஞானம், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், வரலாறு அல்லது மொழிரசனை (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்).

  • பிரயோகத் தொழினுட்பத் துறைகள்: நீரியல் வளங்கள், மின் மற்றும் இலத்திரனியல், இரத்தினக்கற்களும் ஆபரணங்களும், தேயிலை அல்லது தென்னை.

  • பொதுக் கற்கைகள்: பூகோளக் கற்கைகள் (Global Studies).


வாராந்த நேர அட்டவணை (வாரத்திற்கு மொத்தம் 40 பாடவேளைகள்)

ஒரு வாரத்தில் உள்ள 40 பாடவேளைகளும் பாடங்களுக்கேற்ப பின்வருமாறு பகிரப்பட்டுள்ளன:

  • முக்கிய பாடங்கள் (தலா 5 பாடவேளைகள்): தாய்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய நான்கு பிரதான பாடங்களுக்கும் வாரத்திற்கு தலா 5 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • சமூகக் கல்வி: வரலாறு, புவியியல், குடியியல் ஒருங்கிணைந்த சமூகக் கல்விப் பாடத்திற்கு வாரத்திற்கு 4 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • அழகியல் கல்வி: அழகியல் பாடத்திற்கு வாரத்திற்கு 3 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • தலா 2 பாடவேளைகள் கொண்ட பாடங்கள்: தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் (ICT), வாழ்க்கைக்கான தொழினுட்பவியல், சமயம் மற்றும் சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களுக்கு வாரத்திற்கு தலா 2 பாடவேளைகள் வழங்கப்பட்டுள்ளன.

  • தலா 1 பாடவேளை கொண்ட பாடங்கள் மற்றும் செயற்பாடுகள்: இரண்டாம் தேசிய மொழி, தொழில்முயற்சியாண்மையும் நிதிசார் எழுத்தறிவும், தெரிவு மொடியூல் (Elective Module), நூலகப் பயன்பாடு (Library) மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் (விளையாட்டுக்கள், சங்கங்கள், சமூக சேவை மற்றும் தரம் 7 இலிருந்து ஆரம்பமாகும் தொழில்வழிகாட்டல் / வாழ்க்கைத்திறன்கள்) ஆகிய ஒவ்வொன்றிற்கும் வாரத்திற்கு தலா 1 பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது

  • கிரெடிட் சுமை: 2025 இல் ஒரு தவணைக்கு 35 கிரெடிட்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. 2026 இல் ஒரு தவணைக்குக் குறைந்தபட்சம் 27 கிரெடிட்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், தரம் 6–9 இற்கு 29 கட்டாய கிரெடிட்கள் + 1 தெரிவு மொடியூல் என மொத்தம் 30 கிரெடிட்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த அதே பாடங்களே தற்போதைய கட்டாயப் பாடங்களாக உள்ளன. தெரிவுப் பாடங்கள் மாற்றப் பட்டுள்ளன. 


  • நேர அட்டவணை: 2025 இல் ஒரு பாடவேளை 50 நிமிடங்கள் எனவும், மொத்த பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் கூட்டப்படும் எனவும் திட்டமிடப்பட்டது. 2026 வழிகாட்டலில் இது மாற்றப்பட்டு, ஒரு பாடவேளை 40 நிமிடங்கள் வீதம் வாரத்திற்கு 40 பாடவேளைகள் (காலை 7:30 முதல் பிற்பகல் 1:30 வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.(தற்போதைய பாடசாலை நேரம் மாற்றமின்றி பின்பற்றப்படும்) 


6. தரம் 9 தேசிய மதிப்பீடு (Grade 9 Assessment)

இரண்டு ஆவணங்களிலுமே தரம் 9 இன் இறுதியில் தேசிய அளவிலான உளச்சார்பு மற்றும் திறன் மதிப்பீடு (Skills & Psychometric Assessment) முன்வைக்கப்பட்டுள்ளது. 2026 வழிகாட்டலில் இது மாணவர்களைப் பிரித்து ஒதுக்கும் அல்லது வடிகட்டும் தேர்வு அல்ல (Not for selection/exclusion) என்பதும், மாணவர்கள் தங்களின் ஆற்றலுக்கேற்ப உயர்கல்வி அல்லது தொழிற்கல்விப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல் கருவி என்பதும் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

7. சிரேஷ்ட இடைநிலை மற்றும் உயர்தரப் பிரிவுகள் (தரம் 10–13)

  • 2025 இல் தரம் 10–11 இல் 5 கட்டாயப் பாடங்கள் + 2 தெரிவுப் பாடங்கள் என 7 பாடங்களுக்கு மட்டுமே பொதுவான சா/த பரீட்சை நடாத்துதல், தொழிற்கல்விப் பாதை (Vocational stream) மற்றும் உயர்தரத்தில் 4 கல்விசார் துறைகளுடன் தொழிற்கல்விப் பாதையை இணைத்தல் போன்ற விரிவான எதிர்காலத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.


  • 2026 இல்: தற்போதைய கள எதார்த்தத்திற்கேற்ப முதற்கட்டமாக ஆரம்பப் பிரிவு (1–5) மற்றும் கனிஷ்ட இடைநிலைப் பிரிவு (6–9) சீர்திருத்தங்களுக்கு உடனடி முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தரம் 7 முதல் 13 வரையான இறுதி மொடியூல் விபரங்கள் மற்றும் சா/த, உ/த மதிப்பீட்டுத் திட்டங்கள் கல்வி அமைச்சினால் உரிய நேரத்தில் தீர்மானிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முடிவுரை

2025 ஆம் ஆண்டின் புதிய கல்வி மறுசீரமைப்பின் பரந்த தத்துவார்த்தக் கனவுகளையும் எதிர்கால இலக்குகளையும் தாங்கிய ஒரு கொள்கை வரைபடமாக விளங்கியது. அதன் மீது வீசப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் மற்றும் அது சந்தித்த நெருக்கடிகளின் பின்னர், அது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

2026 ஆம் ஆண்டில், பாடசாலைகளின் வளப் பகிர்வு, ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகளைக் கருத்திற் கொண்டு அக்கொள்கைகளை யதார்த்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது எனலாம். 


Post a Comment

Previous Post Next Post