பாடசாலை ஆராய்ச்சி மதிப்பீட்டுத் வேலைத்திட்டம் - கல்வி அமைச்சின் சுற்றறிக்கை
இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சானது, அமைச்சுச் செயலாளர் திரு. நாலக களுவேவ அவர்களால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் 30/2026 இன் கீழ், அதன் வருடாந்த பாடசாலை ஆராய்ச்சி மதிப்பீட்டுத் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது
ஆராய்ச்சி சமர்ப்பிப்புகளை மின்னஞ்சல் மூலமாக studentresearch26@gmail.com என்ற முகவரிக்கு அல்லது குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் திகதிகளுக்கு முன்னர் "கல்விப் பணிப்பாளர் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கிளை), இசுருபாய, பத்தரமுல்ல" எனும் முகவரிக்கு நேரில்/அஞ்சலில் அனுப்பி வைக்க முடியும்
வேலைத்திட்டக் கட்டமைப்பு மற்றும் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதிகள்
1. மாணவர் ஆராய்ச்சி வேலைத்திட்டம்
ஆரம்ப, கனிஷ்ட இடைநிலை மற்றும் சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மட்டங்களில், தினசரி அவதானிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் அடிப்படையில் பகுப்பாய்வு சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது
ஆரம்பப் பிரிவு (தரம் 1 முதல் 5 வரை): விலங்குகளின் நடத்தை, தாவரங்கள் முளைத்தல் போன்ற இயற்கையான அல்லது சுற்றுச்சூழல் நிகழ்வுகளை 4 வார காலப்பகுதிக்கு அவதானித்து, "மாணவர் அவதானிப்பு நாட்குறிப்புகளை" சமர்ப்பிக்க வேண்டும்
. இறுதித் திகதி: 2026 ஒக்டோபர் 15 (பாடசாலை மட்டம்) . கனிஷ்ட இடைநிலைப் பிரிவு (தரம் 6 முதல் 9 வரை): தனிப்பட்ட அல்லது பாடசாலை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் செயன்முறைகளைப் பகுப்பாய்வு செய்ய, மாதிரிச் செயற்பாட்டுத் தாள்களைப் பயன்படுத்தி "பிரதிபலிப்பு ஜேர்னலை" தயாரித்தல் வேண்டும்
. இறுதித் திகதி: 2026 ஒக்டோபர் 15 (பாடசாலை மட்டம்) . சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு (தரம் 10 முதல் 13 வரை): "மாணவ ஆராய்ச்சியாளர்கள்" (Young Researcher Programme) என்ற பெயரில், 5 பேருக்கு மிகாத மாணவர்கள் கொண்ட குழுக்கள் பண்புத்தரம் மிக்க கல்வி (SDG 4), பாலின சமத்துவம் (SDG 5) மற்றும் காலநிலைச் செயற்பாடுகள் (SDG 13) போன்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு (SDGs) அமைவாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்
. இதன் மதிப்பீடுகள் படிமுறையாக நிகழும்: பாடசாலை மட்ட இறுதித் திகதி: 2026 ஒக்டோபர் 15
வலய மட்ட இறுதித் திகதி: 2026 ஒக்டோபர் 30
மாகாண மட்ட இறுதித் திகதி: 2026 டிசம்பர் 01
தேசிய மட்ட இறுதித் திகதி: 2026 டிசம்பர் 15
தெரிவு செய்யப்படும் சிறந்த மாணவர் ஆராய்ச்சிகளின் சாராம்சங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்படவுள்ள "NextGen Insight" என்ற உத்தியோகபூர்வ ஆய்விதழில் பிரசுரிக்கப்படும்
2. ஆசிரியர்களுக்கான செயல் ரீதியான ஆராய்ச்சி
ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நேரடி தேசிய மட்டத்தில் நடத்தப்படும் இப் பிரிவில், கற்றல்-கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயல் ரீதியான ஆராய்ச்சி அறிக்கைகள் (3,000 முதல் 6,000 சொற்களுக்குள், APA 7 ஆம் பதிப்பு வழிகாட்டல்களுக்கமைய) சமர்ப்பிக்கப்பட வேண்டும்
3. கல்வித் துறைசார் தொழில்வாண்மையாளர்கள்
இலங்கை கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் அதிபர் சேவையின் உத்தியோகத்தர்கள், கல்வி நிர்வாகத்தில் உள்ள சமகாலப் பிரச்சினைகள் குறித்து 6,000 சொற்களுக்கு மிகாமல் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க முடியும்
மேலதிக வழிகாட்டல்கள் மற்றும் மதிப்பீட்டு நியதிகள் தொடர்பான விபரங்களுக்கு, ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பாடசாலை நிர்வாகம் அல்லது வலயக் கல்வி அலுவலகங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
