கல்வி அமைச்சு சுற்றறிக்கை: சுமார் ஒரு இலட்சம் ஆசிரியர்களுக்கு தரம் I பதவி உயர்வு



கல்வி அமைச்சு சுற்றறிக்கைசுமார் ஒரு இலட்சம் ஆசிரியர்களுக்கு தரம் I பதவி உயர்வு

​சுமார் ஆறு வருடங்களாக பதவி உயர்வு கிடைக்காமல் இருந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை ஆசிரியர் சேவையின் தரம் I-க்கு (Grade I) பதவி உயர்த்துவதற்கான விசேட சுற்றறிக்கையொன்றை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

​அரசு சேவை ஆணைக்குழுவின் (PSC) அனுமதியுடன் கடந்த 18 ஆம் திகதி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

​2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் தரம் I-க்கு பதவி உயர்வு பெறுவதற்குத் தேவையான தகைமையான 'திறமைகாண் தடைத்தாண்டல் III' (Efficiency Bar III) பரீட்சையை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்களிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த தர பதவி உயர்வுக்கு முன்னர் குறித்த தடைத்தாண்டல் தகைமையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

​பதவி உயர்வுக்குரிய பாடநெறித் தொகுதிகளை (Modules) ஏற்கனவே பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள், மீண்டும் திறமைகாண் தடைத்தாண்டல் பரீட்சைகளை எழுத வேண்டிய அவசியமில்லை எனவும், அவர்கள் உரிய திகதியில் பதவி உயர்வைப் பெற தகுதியுடையவர்கள் எனவும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

​அத்துடன், புதிய நடைமுறையின் கீழ் தற்போது பரீட்சை நடத்துவதற்காக வர்த்தமானி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த வர்த்தமானி அறிவித்தல்களின்படி, ஒவ்வொரு தரத்திற்குமான தடைத்தாண்டல் பரீட்சை நடத்தப்படும் திகதி வரை பதவி உயர்வுக்கான திகதி அமைந்துள்ள ஆசிரியர்களுக்கும் அத்தரத்திற்கான தடைத்தாண்டல் நிபந்தனையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

​மேலும், இந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குப் பின்னரான திகதிகளில் பதவி உயர்வுக்குத் தகுதிபெறும் ஆசிரியர்கள், பழைய நடைமுறையின் கீழ் ஏற்கனவே உரிய பாடநெறித் தொகுதிகளை பூர்த்தி செய்திருந்தால், அவர்களும் புதிய முறைமையின் கீழ் மீண்டும் தடைத்தாண்டல் பரீட்சைகளை எழுத வேண்டியதில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post